மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சி: பிரதமர் மோடி உறுதி

  • மக்களவையின் தாற்காலிகத் தலைவராக பொறுப்பேற்ற கமல்நாத்துடன் (இடமிருந்து) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
  • மக்களவையின் தாற்காலிகத் தலைவராக பொறுப்பேற்ற கமல்நாத்துடன் (இடமிருந்து) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றி, அவர்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்க நாங்கள் பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சி தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து புதிய மக்களவையை அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

முதல் கட்டமாக, மக்களவையின் தாற்காலிக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் பதவியேற்கும் நிகழ்ச்சி, தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை காலையில் நடைபெற்றது. கமல்நாத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மோடி உறுதி: தாற்காலிக அவைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நாடாளுமன்ற வளாகத்துக்கு மோடி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “”ஜனநாயகத்தின் இந்தக் கோவிலில், மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். நாங்கள் ஆட்சி புரிய தீர்ப்பளித்ததற்கு மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார். மோடி வியாழக்கிழமையன்று முதல் முறையாக எம்.பி.யாகப் பதவியேற்க உள்ளார்.

முண்டே மறைவுக்கு மக்களவை இரங்கல்: இதனிடையே, பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 10.45 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு கமல்நாத் சென்றார். மக்களவையில் அதன் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையின் முதல் நாள் அலுவலை முறைப்படி தொடங்கினார்.

அப்போது பதினாறாவது மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்களின் பட்டியலை மக்களவை செயலாளர் பி.ஸ்ரீதரன் அவையில் தாக்கல் செய்தார்.

புதிய எம்.பி.க்களின் பதவியேற்பு நடைமுறை தொடங்கும் முன்பு, கோபிநாத் முண்டேவுக்கு இரங்கல் தெரிவிக்கலாமா? என்று எம்.பி.க்களிடம் கமல்நாத் கருத்து கேட்டார். அதற்கு, எம்.பி.க்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, கோபிநாத் முண்டேவின் அரசியல், சமூகப் பணிகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகள் தொடர்பான குறிப்பை கமல்நாத் வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்த பாஜகவுக்கு புதன்கிழமை முக்கியமான நாளாகும். எனினும், மூத்த அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் இறந்தது அக்கட்சி எம்.பி.க்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

முண்டேவுக்கு நினைவஞ்சலி செலுத்திய பின், மக்களவைக் கூட்டத்தொடர் அலுவலை வியாழக்கிழமை காலை 11 மணிவரை கமல்நாத் ஒத்திவைத்தார்.

புதிய அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கமல்நாத் அவை நிகழ்ச்சிகளை நடத்துவார். மக்களவையின் மூத்த எம்.பி. என்ற முறையில் அவர் இடைக்கால அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 67 வயதாகும் கமல்நாத், தற்போது 9ஆவது முறையாக எம்.பி.யாகியுள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “”காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” என்று தெரிவித்தார்.

எம்.பி.க்களின் பதவிப் பிரமாணம்: புதிய எம்.பி.க்களுக்கு தாற்காலிக மக்களவைத் தலைவர் கமல்நாத் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் சார்ந்த கட்சிகளின் அகர வரிசைப்படி பதவியேற்றுக் கொள்ள உறுப்பினர்கள் அழைக்கப்படுவர் என்று மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையைத் தொடர்ந்து மக்களவைத் தலைவருக்கான தேர்தலை வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடத்த கமல்நாத் நடவடிக்கை மேற்கொள்வார். அப்பதவிக்கு பாஜக சார்பில் மூத்த உறுப்பினர் சுமித்ரா மகாஜன் பெயர் முன்மொழியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 8 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தலைவர் தேர்தல்: மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் இருப்பதால் அக்கட்சி நிறுத்தும் வேட்பாளரே மக்களவைத் தலைவராகும் வாய்ப்பு உள்ளது. புதிய மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரது தலைமையில் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) மக்களவை கூடும். அன்றைய தினம், மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார்.

அவரது உரை தொடர்பாக தில்லியில் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், குடியரசுத் தலைவர் ஆற்றவுள்ள உரையில் இடம்பெறும் முக்கிய அம்சங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

கூட்டுக் கூட்டம்: குடியரசுத் தலைவர் உரையாற்றியதும் மாநிலங்களவை கூட்டத்தொடர் முறைப்படி திங்கள்கிழமை நண்பகலில் தொடங்கும். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஜூன் 10, 11 ஆகிய நாள்களில் பேச அழைக்கப்படுவர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசியதும் அது தொடர்பான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்படும். பின்னர் ஜூன் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்படாமல் ஒத்திவைக்கப்படும்.

TAGS: