கற்பழிப்பு இயல்பானது: மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை

teenage-girlsஉத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் பலாத்காரம் நடப்பது இயல்பானதே என்று சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஒரு பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அங்கு பெண்களுக்கு எதிராக மோசமான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மேலும், உத்திரப்பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கைவிடுத்து வருகிறது.

ஆனால் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், எல்லா மாநிலத்திலும் இப்படித்தான் நடக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சமாஜ்வாடி கட்சியினரின் இந்த சர்ச்சை பேச்சுகளால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மோசின்கான் கூறுகையில், காதலர்கள் தங்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டு பிரச்சினை என்று வரும்போது பாலியல் பலாத்காரம் என்று அதை புகாராக அளிக்கிறார்கள்.

இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாக எடுக்க கூடாது.

உத்திரபபிரதேசம் மிகப்பெரிய மாநிலம், எனவே பலாத்காரம் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கும்.

மேலும், இதில் அரசை குறை கூறவழியில்லை என்றும், ஊடகங்கள் நாட்டின் பிற பகுதியில் நடக்கும் சம்பவங்களை மறைத்துவிட்டு உத்திரப்பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

TAGS: