பொற்கோயிலுக்குள் கோஷ்டி மோதல்: வாள்வீச்சில் 12 பேர் காயம்

  • பொற்கோயில் வளாகத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல்.
    பொற்கோயில் வளாகத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரஸ் பொற்கோயிலுக்குள் சீக்கியர்களின் இருபிரிவினரிடையே வெள்ளிக்கிழமை பயங்கர மோதல் மூண்டது. வாள்கள் மற்றும் தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 12 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமிருதசரஸ் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ஜதீந்தர் சிங் ஒளலாக் கூறியதாவது:

பொற்கோயிலுக்குள் “ஆபரேஷன் புளூஸ்டார்’ நடவடிக்கை மேற்கொண்டதன் 30ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அமிருதசரஸ் நகரில் “பந்த்’ போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பொற்கோயில் வளாகத்திலுள்ள அகால் தக்த் பகுதியில், அகாலி தள பிரிவு தலைவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிம்ரஞ்ஜித் சிங் மான், அவரது ஆதரவாளர்களுடன் “காலிஸ்தான்’ பயங்ரவாத இயக்கத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். மேலும், சீக்கியர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண மாநிலத்தை ஆளும் சிரோமணி அகாலி தளம் அரசும், சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியினரும் (எஸ்ஜிபிசி) முறையான நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பொற்கோயிலின் பாதுகாப்புக் குழுவான சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு குழுவினருக்கும் இடையே பயங்கர மோதல் உருவானது. இதில் ஒருவரை ஒருவர் வாள், ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் எஸ்ஜிபிசி குழுவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

பொற்கோயில் வளாகத்துக்குள் போலீஸ் அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் இந்த மோதலைத் தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று ஜதீந்தர் சிங் ஒளலாக் தெரிவித்தார்.

இந்நிலையில் மோதல் தொடர்பாக சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி அளித்த புகாரின்பேரில் 28 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் எம்.பி.க்கள் கண்டனம்: அமிருதசரஸ் கோயிலுக்குள் நடைபெற்றுள்ள இந்த மோதலுக்கு பஞ்சாப் மாநில எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிரோமணி அகாலி தளம் கட்சி எம்.பி.யான பிரேம் சிங் சந்துமஜ்ரா கூறுகையில், “சீக்கியர்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கியமான தினம். ஆனால் பொற்கோயிலுக்குள் நடத்தப்பட்டுள்ள, இந்த மோதலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இது போன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது’ என்றார்.

ஐ.நா. விசாரணை கோரிக்கைக்கு அம்ரீந்தர் சிங் எதிர்ப்பு: இதற்கிடையே பொற்கோயிலில் கடந்த 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட “ஆபரேஷன் புளூஸ்டார்’ நடவடிக்கை குறித்து ஐ.நா.சபை விசாரணை நடத்த வேண்டும் என்று சில சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பின்னணி: பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் தனிநாடாக அறிவிக்க வலியுறுத்தி, 1980ஆம் ஆண்டுகளில் சீக்கிய தீவிரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கியர்களின் புனிதக் கோயிலான, அமிருதசரஸ் நகரிலுள்ள பொற்கோயிலுக்குள் புகுந்த தம்தமி தக்ஸல் இயக்க தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள் அங்கிருந்து செயல்படத் தொடங்கினர். அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்காக 1984ஆம் ஆண்டு “ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற பெயரில், ராணுவம் பொற்கோவிலுக்குள் புகுந்து, 1,000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இதனால் சீக்கியர்கள் கோபமடைந்தனர். அதன் விளைவாக சீக்கிய பாதுகாவலரால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

TAGS: