இலங்கையில் 78 இந்திய மீனவர்கள் கைது

indian_fishermen_arrestedஇலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததான குற்றச்சாட்டில் 78 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் இவர்கள் சனிக்கிழமை இரவும், ஞாயிறு அதிகாலையும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரும், மீன்வளத்துறையினரும் கூறுகிறார்.

இவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து வருவதாகவும்,அதனால் தமது வாழ்வாதரங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை விரைவாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமது மீனவர்களை விடுவிக்க இந்தியா நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்று இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 42 பேர் சிறைபிடிப்பு: இலங்கை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை சிறை பிடித்தனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப் பகுதியில் ரோந்துப் பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 42 மீனவர்களைச் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். மேலும், 8 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாக மீனவர்கள் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர். மேலும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் முழு விவரம் மீன் பிடிக்கச் சென்ற மற்ற மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ராமேசுவரம் பகுதிக்கு திரும்பி வந்த பின்னரே தெரியவரும் என ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் தெரிவித்தார்.

TAGS: