இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்படுவது ஏன்?

1606-98301தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

குறிப்பாக இலங்கை கடல் எல்லை பகுதியையொட்டியிருக்கும் வேதாரணயம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களே இலங்கை கடற்படையினரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மீனவர்கள் பிரச்சினையில் மட்டும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கு உதாரணமாக மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும், மீனவர்கள் சிறைபிடிப்பது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிலர் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் ஓரிரு நாட்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மீனவர்கள் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை அணி அணியாக சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 100–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இப்படி தொடர்ச்சியாக மீனவர்கள் சிறைபிடிப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சென்னையில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்கள் சுமார் 350 கி.மீ. தூரம் வரை கடலுக்குள் சென்று மீன்பிடிக்கலாம். அவ்வளவு தூரத்துக்கு நமது கடல்பகுதி உள்ளது.

இதேபோல தூத்துக்குடி, நெல்லை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்ட மீனவர்களுக்கும் மீன்பிடிப்பதற்கு போதுமான இந்திய கடல்பகுதி உள்ளது.

இதனால் இலங்கை கடற்படையினரால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

அதே நேரத்தில், வேதாரண்யம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு கடல் பகுதியில் குறைவான கி.மீ. தூரமே உள்ளது.

12 கி.மீ. தூரத்துக்குட்பட்ட பகுதி வரை மட்டுமே நம்முடைய கடல் பகுதி இருக்கிறது. இந்த பகுதிகளில் மீன்வளமும் குறைவுதான்.

இதன் காரணமாகவே மீனவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சில நேரங்களில் எல்லைதாண்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

குறைவான எல்லைப்பகுதி மற்றும் மீன் வளம் இல்லாதது ஆகிய 2 காரணங்களாலேயே இலங்கை கடல் எல்லை பகுதிகளுக்கு சென்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, முந்தைய காங்கிரஸ் அரசைப் போல அல்லாமல், நிர்வாக சீர்திருத்தங்களுக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதேபோல தமிழக மீனவர்களின் நலனிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

TAGS: