தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி, உயர்ரக படகுகள் வாங்க மானிய உதவிகள் அளிப்பது ஆகியவே நீண்டகால அடிப்படையில் நிரந்திரத் தீர்வாக அமையும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது, அதன் காரணமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்கதையாகவுள்ள நிலையிலேயே தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது.
தமது கடற்பரப்பில் கடல் வளம் குறைந்துள்ளது, அதன் காரணமாகவே இலங்கை கடற்பரப்புக்குள் செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்று தமிழக மீனவர்கள் கூறுவது ஏற்புடையதல்ல என்று இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இது தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியாவின் மத்திய மாநில அரசுகள், தமிழக மீனவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தேவையான படகுகள் மற்றும் உபகரணங்களை வாங்க மானியமும், கடனும் அளித்தால், தமது மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் செல்வதை முற்றாக தடுக்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் பி சேசு, பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் இத்திட்டம் வெற்றியடைய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் எனவும் சேசு கூறுகிறார்.
இலங்கை மீனவர்கள் மீது தமிழக மீனவர்களுக்கு கரிசனை உள்ளது என்றும் இருநாட்டு அரசுகள் மற்றும் மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்தைகள் மூலம் இருபகுதி மீனவர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். -BBC