மீனவர்கள் கைது: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- சுஸ்மா சுவராஜ் இந்திய உயர்ஸ்தானிகருக்கு உத்தரவு

modi_jaya_002தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், இலங்கைக்கு எதிராக அதி உயர் இராஜதந்திர ரீதியான எச்சரிக்கையை விடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் இந்த கைதுகளை மேற்கொள்கின்றமை இந்தியாவுக்கு அடிபணியாத தன்மையை காட்டுகிறது.

எனவே இதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

மேலும் தொடரும் இந்த பிரச்சினைக்கு உடனடியான தீர்வினையும் பெற்றுத் தர வேண்டும்.

தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது சிறந்த உறவு காணப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசாங்கத்திடம் இருந்த இந்த விடயத்தில் உடனடி பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுஸ்மா சுவராஜ் இந்திய உயர்ஸ்தானிகருக்கு உத்தரவு

இலங்கையில் கைது செய்யப்பட்டு தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பில், இந்தியா இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் உத்தரவின் பேரில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால், இலங்கை அதிகாரிகளுடன் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் 73 தமிழ் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையீட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார்.

TAGS: