தமிழ்நாட்டில் மாநிலக் கல்வித் திட்டங்களைக் கடைபிடிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 2015-16 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஒரு கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுத் தருவதற்கே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படுவது வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில வழியில் கற்றுத் தரும் பதின்நிலைப்(மெட்ரிக்) பள்ளிகள் காளான்களைப் போல பெருகிய பிறகு தான், தமிழகத்தில் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெற்றுவிட முடியும் என்ற அவல நிலை ஏற்பட்டது. அனைத்துப் பள்ளிகளில் ஆங்கிலமும், பெரும்பாலான பள்ளிகளில் இந்தியும் கட்டாயப் பாடமாக இருக்கும் நிலையில், தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்-2006’ முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு 2006-07 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த இந்தச் சட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட இருக்கிறது.
இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப் பட வேண்டிய முன்னேற்றமாகும்.
ஆனால், வணிக நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள், இப்போது தமிழ் கட்டாயப் பாட சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, அதை செயல்படுத்தாமல் இருக்க ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றன. இது நியாயமற்றது. தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் 8 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘‘நாங்கள் இதுவரை தமிழை கற்பிக்கவில்லை; எனவே அடுத்த ஆண்டில் 10ஆம் வகுப்புக்கு தமிழைக் கட்டாயப் பாடமாக்கக் கூடாது’’ என்று எதிர்ப்பது சரியா? என தனியார் பள்ளிகள் சிந்திக்க வேண்டும்.
தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது சிறுபான்மை பள்ளிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்று தனியார் பள்ளிகள் தரப்பில் முன்வைக்கப் படும் வாதத்தை ஏற்க முடியாது. இச்சட்டத்தை எதிர்த்து மலையாள சமாஜம், கன்னியாகுமரி மாவட்ட நாயர் சேவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 18.02.2008 அன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம்,‘‘ அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்க வில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ என கண்டனம் தெரிவித்தது.
இதற்கெல்லாம் மேலாக ஒரு மாநிலத்தின் மொழியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும், செழுமைப் படுத்த வேண்டிய கடமையும் அந்த மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழை கட்டாயப் பாடமாக்கி கற்பிப்பதால் கல்வித் தரம் எந்த வகையிலும் குறையாது. மாறாக திருக்குறள் கற்றுத்தரும் அறம் மற்றும் பொருளும், ஆத்திச்சூடி கற்பிக்கும் நன்னெறியும், புறநானூறு பயிற்றுவிக்கும் வீரமும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ வழி செய்யும்.
எனவே, தமிழை புறந்தள்ளி விட்டு, ஆங்கில வழிக் கல்வியையும், அயல்மொழிப் பாடங்களையும் கற்றுத் தருவது தான் உயர்வான கல்வி என்ற மாயையை மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புவதை விடுத்து, அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்றுத் தர தனியார் பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அதன் அடையாளமாக தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் நாட்டிலேயே தமிழுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்த தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.இதனை முதலமைச்சர் முதல் வேலையாகச் வேண்டும்.
தங்க தமிழ் நாட்டில் பேசுவது ,எழுதுவது எல்லாம் தமிங்க்லிஷ் ….இந்த அழகில் தமிழை படித்து என்ன கிழிக்க போகின்றார்கள் இந்த சுரணை கேட்ட ஜென்மங்கள் ?