காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சிக் குழு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு ஒன்றை அளித்தது.
இன்று காலை புது தில்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்து பேசினார்.
டில்லியில் நடைபெற்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, ஆனந்த் குமார், எம்.வெங்கைய நாயுடு, ஜி.எம். சித்தேஷ்வரா, ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அனைத்துக்கட்சிக் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது.
அந்த சந்திப்பில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பில் ஒரு மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் அளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான முடிவு பற்றிய பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ் நாடு தரப்பில் கோரப்படுவது நியாயமற்றது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீர் தொடர்பான சிவில் முறையீடுகள் தொடர்பில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக மக்களவை தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
இந்திய குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரித்து உரையாற்றிய போதே இந்த விவகாரம் தொடர்பில் அவர் மக்களவையில் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பில் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை பேச துவங்கியவுடன் கர்நாடகாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். -BBC