நாடாளுமன்றத்தை கலக்கிய நேதாஜியின் பேரன்

sugadha_bose_001திரினமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் நேதாஜியின் கொள்ளு பேரனான சுகதா போஸ் தனது முதல் நாடாளுமன்றப் பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவரின் பேச்சை கட்சி பாகுபாடின்றி அனைவரும் பாராட்டியுள்ளனர்.

சுகதா போஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளு பேரன் ஆவார். சுகதா போஸின் தந்தை சரத் சந்திர போஸ் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்.

மேலும் சுகதா போஸ் உரையாற்றியபோது அவைத் தலைவராக ரத்னா தே நாக் அவையை நடத்தினார் என்பதும் விசேஷமாக அமைந்தது.

அமெரிக்காவில் படித்த சுகதா போஸ், தனது முதல் பேச்சின்போது, நாட்டின் பல்வேறு பிரச்சினைகளையைும் பற்றி பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அண்டை நாடுகளுடன் சுமூக உறவை வலுப்படுத்த வேண்டும், தலித்துகள், சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீண்ட உரையாற்றியுள்ளார்.

தனது பேச்சின்போது ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளையும், காஸி நஸ்ரூல் இஸ்லாம் ஆகியோரின் மேற்கோள்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்தவர் ஊடுறுவல் பிரச்சினை குறித்து குறிப்பிடுகையில், சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினையில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கு வங்கமும் திரினமூல் காங்கிரஸும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்ததைப் பாராட்டிய சுகதா போஸ், பிராந்தியப் பிரச்சினைகள், இந்தியாவின் உலகளாவிய பங்கை சீர்குலைப்பதாக அமைந்து விடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சுகதா போஸின் பேச்சால் அத்தனை உறுப்பினர்களும் அசந்து போன நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுந்து சென்று சுகதா போஸுக்கு கைகொடுத்து வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுகதா போஸுக்குக் கிடைத்த பாராட்டால் திரினமூல் காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.

TAGS: