தாய்மொழிக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது: தா. பாண்டியன்

தாய்மொழிக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்திóயுள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தாய்மொழியான தமிழை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புற்றீசல் போல முளைத்துள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கில வழிக் கல்விக்கு வழிவகுத்து விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இப்பள்ளிகள், “கல்வித் தரம் உயரும், வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும்’ என்ற கவர்ச்சிகரமான பிரசாரத்தின் மூலம் பெற்றோர்களை கவர்ந்திழுக்கின்றன.

அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பும் பெற்றோர்கள், ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளை சேர்க்க லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக உள்ளனர்.

பெற்றோர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் இப்பள்ளிகள், தாய்மொழியாம் தமிழுக்கு இங்கே வேலை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இவர்களின் இத்தகைய அத்துமீறிய செயலுக்கு முடிவு கட்டவும், தமிழைக் காக்கவும் 2006-ஆம் ஆண்டு முதல் தமிழை ஒரு மொழிப் பாடமாக கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை தமிழ் மொழிக்கு எதிரான யுத்தமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தமிழ் மொழிக்கு எதிரான யுத்தத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும்.

தமிழ் மொழியைக் காக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

TAGS: