காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை: மத்திய அமைச்சர் உமா பாரதி

  • மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில் வியாழக்கிழமை பேட்டியளித்த அத்துறையின் அமைச்சர் உமா பாரதி, இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார்.
  • மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில் வியாழக்கிழமை பேட்டியளித்த அத்துறையின் அமைச்சர் உமா பாரதி, இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்புடைய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நீர்வளம், நதி நீர் வளர்ச்சி, கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல் துறையின் அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் மத்திய நீர் வளத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு மாநிலங்கள் சார்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிச்சயம் அரசு பரிசீலிக்கும். இரு மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதன்படியே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

கங்கை நதியை சுத்திகரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கங்கை நீரை தூய்மையாக்குவது தொடர்பான விவாதங்களில் ஈடுபட “கங்கா மந்தன்’ என்ற இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், துறவிகள், விஞ்ஞானிகள், அரசு சாரா நிறுவனங்கள், நீர் பாதுகாக்கும் அமைப்பில் உள்ளவர்கள் இடம்பெறுவர். இதன் மூலம் கங்கை நதியை தூய்மையாக்கும் முயற்சி தொடர்பான விழிப்புணர்வை தேசிய அளவில் மக்களிடையே கொண்டு செல்ல முடியும். இதேபோல, நாட்டில் உள்ள பிற நதிகளைத் தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் சார்பில் கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது தொடர்பான இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்றார் உமாபாரதி.

இப்பேட்டியின்போது மத்திய நீர் வளத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார், துறைச் செயலர் அலோக் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

TAGS: