பொருளாதாரத்தை வலுப்படுத்த கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வரும் ஆண்டுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி பிரதமராக பதவியேற்று 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் முந்தைய மன்மோகன் சிங் அரசை முதல் முறையாக விமர்சித்துள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமை பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைய முதல் முறையாக மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதற்கு நாட்டின் இளைஞர்கள்தான் காரணம். ஊழலிடம் இருந்து நாடு விடுதலை பெற்று, விரைவான வளர்ச்சி ஏற்பட அவர்கள் வழிவகுத்துள்ளனர்.

ஜாதீயவாதம், மதவாதம், ஆட்சியில் உள்ளவர் தங்கள் உறவினர்களுக்கு சாதகமாகச் செயல்படுதல், வாரிசு அரசியல் ஆகியவற்றுக்கு இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு, வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி, பிரச்னைகளுக்கு தீர்வு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். என் மீது மக்கள் நம்பிக்கை வைத்து பெரும் பொறுப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை எனது அரசு முழுமையாக நிறைவேற்றும்.

அதல பாதாளத்தில் பொருளாதாரம்: நான் பிரதமராக பதவியேற்றுள்ள இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் உள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளையும், உறுதியான முடிவுகளையும் அடுத்த ஓராண்டில் எடுத்தாக வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் மீளும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்த கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எனது நலனுக்காகவோ அல்லது எனது கட்சி நலனுக்காகவோ எடுக்கப்போவதில்லை. நாட்டின் நலன் கருதியே எடுக்கப்போகிறேன். இதன் காரணமாக மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் அதை நாட்டின் நலன் கருதியே நான் செய்கிறேன் என்பதை அவர்கள் நிச்சயம் உணருவார்கள். அதன் பின்னர் அவர்களது ஆதரவை நான் நிச்சயம் மீண்டும் பெறுவேன்.

அரசு அதிகாரிகள் நாட்டு நலனுக்காக பணியாற்றுவதில்லை என்ற எண்ணம் தவறானது. அரசு நிர்வாகத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று தயார் நிலையில் உள்ளனர். இதை கடந்த 15 நாள்களாக பிரதமர் பதவி வகித்து வரும் நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கூட்டுறவுக் கூட்டாட்சி: நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். இதைத் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைதான் தற்போது புதிய வார்த்தையில் “கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்று கூறுகிறேன். அதன்படி, மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும்.

மாநில திட்டங்களுக்கான நிதியைப் பெற முன்பு மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்த வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலைமையில் தற்போது மாற்றம் வந்துள்ளது. மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாகும். மாநிலங்கள் வளர்ச்சியடைவில்லை என்றால் நாடு வளர்ச்சியடையாது. உள்கட்டமைப்புத்துறையில் அதிக முதலீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு மட்டுமின்றி பிற துறைகளில் முதலீடுகளும் அதிகரிக்கும். அரசு திட்டங்கள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும். கோவாவில் நிலக்கரிச் சுரங்க விவகாரத்தில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் மோடி.

TAGS: