காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அமைச்சர் சதானந்த கெளடா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக மாநிலம், தும்கூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியமற்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் கர்நாடக மாநிலத்துக்கு எதிரான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் அனுமதிக்க மாட்டோம்.

அந்தந்த மாநில முதல்வர்கள் அவரவர் மாநிலங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்; கடிதமும் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட மாநில எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்களின் கருத்தறிந்து பிரதமர் முடிவு எடுப்பார்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடாது என்றார் சதானந்த கெளடா.

சாத்தியமில்லை: பெங்களூருவில் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி விவகாரத்தை அவசியமில்லாமல், அவ்வப்போது எழுப்பி வருகிறார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அடிக்கடி கடிதம் எழுதி வருகிறார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை ஜெயலலிதா நிறுத்திக் கொள்வது நல்லது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை.

அண்மையில் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து காவிரி விவகாரத்தில் கர்நாடகம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து கர்நாடக அனைத்து கட்சித் தலைவர்கள் குழு விளக்கியது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாமல் காவிரி பிரச்னையை எழுப்பி வருவது நல்லதல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

TAGS: