எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு சென்ற அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், “”எல்லையில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை இந்த மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தவுள்ளேன். நான் இங்கு வருவதற்கு முந்தைய நாள் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்கும் திறனை பெற்றுள்ளனர்” என்றார்.
பேட்டியின்போது, அமைச்சர் அருண் ஜேட்லியுடன் ராணுவத் தலைமை தளபதி விக்ரம் சிங் உடனிருந்தார்.
இந்தப் பயணத்தின்போது ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோரை அருண் ஜேட்லி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.