உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்

vellaiyanமயிலாடுதுறை,ஜூன்.16–

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் அன்னிய சார்பு கொள்கையே.

விதை விற்க கூட அமெரிக்க நிறுவனம், சமையல் எண்ணை இறக்குமதி என்று உள்நாட்டு உற்பத்தியை அழித்ததாலும், ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் பாரதீய ஜனதாவிற்கு பெரிய வெற்றியை தந்துள்ளனர்.

தமிழகத்திற்கு வந்த வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அன்னிய எதிர்ப்பு நிலைமையை கடை பிடிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006 –ஐ கைவிட வேண்டும் என வலயுறுத்தப்பட்டுள்ளது.

இக் கோரிக்கைகளை பிரதமர் மோடியை சந்தித்து நேரில் வலியுறுத்த உள்ளோம். அன்னிய முதலீட்டிற்கு எதிராக பாரதீய ஜனதா செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு இருக்காது என்று வர்த்தக மந்திரி கூறியுள்ளார். ஆனால் மொத்த வணிகம் செய்ய வால்மார்ட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளி வருகிறது.

மொத்த வணிகம், வினியோகம் செய்யவும் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

தமிழகத்தை பொறுத்த வரை சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை முதல்வர் முழுமையாக எதிர்த்து வருகிறார். அதே போன்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும்.

இவ்வாறு வெள்ளையன் கூறினார்.

பேட்டியின் மாநில இணை செயலாளர் சந்திரசேகரன், மாநில பொது செயலாளர் தேவராஜ், நாகை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

TAGS: