புதுடில்லி : உள்நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்பிற்காக கூடுதல் நிதி ஒதுக்கி, அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து, 2.80 கோடி புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், உள்நாட்டில் எலக்ட்ரானிக் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியை குறைத்து, செலவை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரமோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசியபோது, ‘சின்னஞ்சிறிய எலக்ட்ரானிக் பொருட்களை கூட நாம் இப்போது இறக்குமதி தான் செய்கிறோம். அவற்றை உள்நாட்டில் தயாரித்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்,’ என்று குறிப்பிட்டார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், அதற்கான நடைமுறைகள் துவங்கி உள்ளன.
டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மானியங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது; இது ஆரம்ப கட்ட நடவடிக்கை மட்டுமே; இதனை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது; அரசு முக்கியத்துவம் அளிக்கும் துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையும் ஒன்று; இதன் மூலம் எலக்ட்ராக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு துறையில் 2 கோடியே 80 லட்சம் பேர் புதிய வேலைவாய்ப்புக்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருத்தி அமைக்கப்பட்ட சிறப்பு ஊக்க மானிய திட்டத்திற்காக 8 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன; இவைகள் காசியாபாத் (உ.பி.,) வதோதரா மற்றும் காந்திநகர் (குஜராத்), நாக்பூர், நாசிக், அவுரங்காபாத் மற்றும் தானே (மகாராஷ்டிரா); அதுமட்டுமின்றி இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பசுமை எலக்ட்ரானிக் உற்பத்தி மையங்கள் போபால், புவனேஸ்வர், ஐதராபாத், மகேஸ்வரம், பிவாடி, ஜபல்பூர், ஓசூர் மற்றும் காக்கிநாடா ஆகிய பகுதிகளில் நிறுவவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டால் விரைவில் இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பு துவங்கப்படும்; சிப் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் தண்ணீர் சுத்திரிகரிப்பிற்கு பயன்படும் செமி கண்டக்டர்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான விவகாரங்களில் வெளிப்படை தன்மையுடன் செயலாற்ற அரசு முடிவு செய்துள்ளது; நாட்டின் மொபைல்போன் தயாரிப்பு வளர்ச்சி துறை மற்றும் வாடிக்கையாளர் நலன் ஆகியவற்றி்ல் சம அளவு கவனம் மேற்கொள்ளப்படும்; பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., போன்ற பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களை விரிவுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது; வடகிழக்கு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது; இதற்காக ரூ.5000 கோடி செலவில் 8000 மொபைல் போன் டவர்கள் அமைக்கப்படும்; இது தொடர்பாக டிராய் மற்றும் எம்.என்.பி.,யிடம் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; அவற்றின் ஒப்புதல்கள் கிடைத்த உடன் இதற்கான பணிகள் துவங்கப்படும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.