ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது: வெளியுறவுத்துறை

sanniபுதுடெல்லி, ஜூன். 19- ஈராக்கில் சன்னி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நீடித்து வருகிறது. கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர்.

நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர். இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தை கிளர்ச்சியாளர்கள் நெருங்கி வருகின்றனர். அவர்களை எதிர்த்து ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கடும் பதட்டம் நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

பலர் இந்தியா திரும்பி விட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 40 பேர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களை மீட்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களை மீட்டு வர சுரேஷ் ரெட்டியை சிறப்பு தூதராக இந்திய அரசு அங்கு அனுப்பியுள்ளது. தற்போது அவர்களின் இருப்பிடம் தெரிய வந்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெட்டி அந்நாட்டை அடைந்துவிட்டதாக தெரிவித்த அக்பருதீன், கடத்தப்பட்ட 40 பேரும் இருக்கும் இடம் குறித்து அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார். எனினும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

TAGS: