முஸ்லிம்கள் மீதான தாக்குதல்-இலங்கை செல்லும் முஸ்லீம் லீக்

musleem_leekமுஸ்லீம்கள் மீதான சிங்களர் வன்முறையைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குழு ஒன்று இலங்கை செல்வதாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.

காதர் மொஹைதீன் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந்தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், இலங்கை இறுதி போருக்கு பின்னரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும்பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பௌத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக் காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துறை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பௌத்த பலசேனா வன்முறையாளர்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு உயிர் உடைமைகளை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.

இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தின் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் அடக்கப்படுவதோடு தமிழ்பேசும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில்கள், கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியும், நிவாரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொஹைதீன், ” இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் இலங்கை துணை தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதியும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக துணை தூதர் உறுதியளித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தூதுக்குழு இலங்கைக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிக்குகளின் தலைவர்கள், பௌத்த பொதுபல சேனாவின் தலைவர்களை சந்திப்பதற்கும் அனுமதி தருவதோடு, பரிந்துரை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கை தூதர் உடனடியாக பரிந்துரை செய்வதாக உறுதி கூறினார்.

எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ்லிம் பிரச்சினை மட்டுமின்றி, அங்குள்ள இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் எடுத்துரைப்போம்.

ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில்லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகுமுறை எப்போதுமே ஆக்கப்பூர்வமாகவே இருக்கும் என்றார் அவர்.

TAGS: