புதுடில்லி : ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா கூறியுள்ளது.
ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக நகரமான மொசுலை கைப்பற்றிய பயங்கரவாதிகள், அடுத்து திக்ரித் நகரையும் கைப்பற்றினர். கடும் போராட்டத்திற்கு பிறகு, திக்ரித் நகரத்தை அவர்களிடமிருந்து மீட்ட ராணுவம், மறுநாளே, மீண்டும் திக்ரித் நகரத்தை, பயங்கரவாதிகளிடம் பறிகொடுத்தது. பயங்கரவாதிகள், தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த மருத்துவமனையில், இந்தியாவைச் சேர்ந்த 46 நர்ஸ்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். இவர்களில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக் நாட்டில், கட்டடப் பணிகள் மற்றும் கட்டமைப்பு துறைகளில், இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே, சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தியர்கள் இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால், உள்நாட்டுப்போரை காரணம் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா அமைப்பினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில், இந்தியர்கள் பலர் பணியாற்றி வருவதாகவும், வேலைக்கு சேர்ந்த உடன், நிறுவனம் எங்களது பாஸ்போர்ட்களை வாங்கி வைத்துள்ளது. தற்போது சம்பளம் தராத நிலையில், பாஸ்போர்ட்டை அவர்கள் தர மறுக்கின்றனர். தற்போது இங்கு உள்நாட்டுப் போர் வேறு தீவிரமடைந்து உள்ள நிலையில், நாங்கள் நாடு திரும்ப முற்பட்டாலும், பாஸ்போர்ட் கிடைக்காததால், தாங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும், விரைவில் தங்களுக்கு உதவுமாறு அவர்கள் கூறி உள்ளனர்.
இதுகுறித்து, இந்திய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், பாஸ்போர்ட்டை திரும்ப வழங்குமாறு அவர்களும் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று அவர்கள் மேலும் கூறினர்.