இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானித்துள்ளன.
அத்துடன், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
கடந்த 15ம் திகதியன்று இலங்கை அளுத்கம பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மண்டலங்கள், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
அந்தத் தொடரிலேயே குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் இந்த முடிவை அறிவித்துள்ளன.

























