சுகர், பிரஷர் மாத்திரைகள் இலவசம்; மோடி அரசின் மெகா தி்ட்டம்

modi_dressபுதுடில்லி : நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள், மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலகட்டத்தில், மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வலி, தொற்றுநோய் பாதிப்பு, நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, அத்துறையின் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அமைச்சர் ஹர்ஷவர்தன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் 75 சதவீத மருந்துகளிலிருந்து, 50 வகையான மருந்துகளை, இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், ஒரே முயற்சியில் அமல்படு்த்தமுடியாது என்ற நிலையில், பல்வேறு கட்டங்களாக, வகைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, குறிப்பிட்ட நகரங்களில், முக்கிய மருத்துவமனைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும், இதன்மூலம் பயன்பெற வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

பாதிப்பை தடுக்கும் மருந்து: இத்திட்டம், முழுமையாக அமல்படுத்தப்படும் நிலையில், நாட்டு மக்கள் அனைவரும், தங்களுக்கு அருகில் உள்ள பொது மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனை நிலையங்களிலிருந்து வலி நிவாரண மருந்துகள், தொற்றுநோய் பாதிப்பை தடுக்கும் மருந்துகள், நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 விதமான நோய்களை குணமாக்கும் மருந்துகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வழிவகை ஏற்படும் என்று அவர் கூறினார்.

1993-98ம் ஆண்டு காலகட்டத்தில், டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹர்ஷவர்தன், மேற்கொண்ட “அத்தியாவசிய மருந்து திட்டம்’ என்ற பெயரிலான திட்டம், இந்திய மக்களின் மருத்துவ சேவைகள் மற்றும் சேவைகள் குறித்த முழுத்தகவல்களை கொண்டிருந்ததாக அமைந்திருந்தது. நாட்டு மக்கள், இன்று தங்களது வருமானத்தில், 60 சதவீதத்தை, மருத்துவ தேவைகளுக்காக என்று ஒதுக்குகின்றனர்.

தங்களது வருமானத்தில், இவ்வாறு அதிக பங்கை, அவர்கள் ஒதுக்க காரணம், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கு அதிக விலைமதிப்பை கொண்டதாக இருப்பதே ஆகும்.

மத்திய அரசு, தற்போது, சுகர் உள்ளிட்ட 50 அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்க இருப்பதன் மூலம், மக்களின் மருத்துவ தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, பெருமளவு குறைவதோடு மட்டுமல்லாது, அவர்கள் சீரிய உடல்நலத்துடன் வாழ்ந்து, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகையும் ஏற்படும் என்று மருந்துகள் குறித்த அறிவியல் ஆய்வில் நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளரும், பேராசிரியருமான ரஞ்சத் ராய் சவுத்ரி கூறியுள்ளார்.

மத்திய அரசு இலவசமாக வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ள 50 அத்தியாவசிய மருந்துகளை தேர்வு செய்த குழுவின் தலைவராக சவுத்ரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹர்ஷவர்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட “டில்லி மாடல்’ மருத்துவ திட்டம், 12 மாநிலங்களிலேயே அமல்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது, இதுகுறித்த நடவடிக்கையை, வளர்ந்த நாடுகளும் பின்பற்றுமாறு, அவைகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

TAGS: