புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நாடுகளுடன் விரைவில் மேற்கொள்ள உள்ள வர்த்தக உறவுகளால், விரைவில் பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாக இந்தியா உருவெடுக்க உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான ப்சோஸ் நிறுவனம், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் கலந்துகொண்ட இந்தியர்களில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், இந்தியா அடுத்த 6 மாதங்களில், சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மையடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்தியா 4வது இடம் :
நாட்டின் பொருளாதார நிலை, மே மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தை விட 6 புள்ளிகள் அதிகரித்து 66 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில், பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில், சவுதி அரேபியாவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ஜெர்மனி மற்றும் சீனா உள்ளன. நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. 65 சதவீதை பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், கனடா 5வது இடத்தில் உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கொள்கைகளினாலேயே, மோடியை முன்னிறுத்திய லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, அறுதிப்பெரும்பான்மை வெற்றி பெற்றதற்கான காரணமாக இப்சோஸ் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.