புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மோடி பிரதமராகபதவியேற்றவுடன் அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள்வழங்கினார்.
அதுமட்டுமல்லாது நான்கு கட்டங்களுக்கு மேல் அரசு கோப்புகள் மேஜையில் தங்கியிருக்க கூடாது எனவும், அதிகாரிகள் அனைவரும் தங்களின் துறை பற்றிய விவரங்கள் மற்றும் திட்டங்கள் தயாரித்து வைத்திருக்கின்றனரா என்பதை தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது சுணக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை மற்றும் இந்திய பொருளாதாரம் மோடி பதவியேற்றவுடன் புதிய உத்வேகத்துடன் இயங்க துவங்கியது. தங்கம் விலை குறைய துவங்கியதுடன் விலைவாசிகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அண்டை நாட்டுடன் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் எந்த பிரதமரும் செய்யாத வகையிலான பதவியேற்பு நிகழ்ச்சியின் போது சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற தலைவர்கள் அனைவரும் மோடியின் நிகழ்ச்சி்க்கு தவறாமல் ஆஜர் ஆயினர்.
அது மட்டுமல்லாது ஜெர்மனி, இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் படி அழைப்பு விடுத்தன. வெகுநாட்களாக விசா வழங்க மறுப்பு தெரிவித்து வந்த அமெரிக்காவும் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளன.
இது ஒருபுறம் இருப்பினும் சில சோக நிகழ்வுகள் மோடி அரசில் நிகழ்ந்துள்ளது. மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட கோபிநாத்முண்டே கார்விபத்தில் மரணம் அடைந்தது பெரும் துரதிஷ்டமாக கருதப்பட்டது. பிரதமராக நுழைந்த முதல் கூட்டத்திலேயே அஞ்சலி செலுத்தும் நிலை உருவானது.
அதுமட்டுமல்லாது பதவியேற்பிற்கு முதல்நாள் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் தீவிரவாதகளின் தாக்குதலுக்குள்ளானது. மேலும் பதவியேற்ற தினத்தன்று உ.பி., மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதுபுறம் இருக்கும் நிலையில் தனது ஒரு மாத நிறைவு நாளில் பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ரயில் பாதையில் வைத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஈராக் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தால் 40 தொழிலாளர்கள் மற்றும் 46 நர்சுகளை தீவிரவாதிகள் கடத்திச்சென்ற சம்பவம் மோடி அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.