மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து சரியாக 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த அனுபவம் குறித்து தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக மத்தியில் பொறுப்பேற்கும் ஆட்சியாளர்களுக்கு முதல் ஒரு சில மாதங்களை ஊடகங்கள் தேனிலவு காலம் என்று குறிப்பிடுவார்கள். அந்த காலத்தில் பெரிதாக எந்த பொறுப்பும் அவர்களுக்கு இல்லை என்பதால் அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் சில செய்தியாளர்கள் கடந்த 30 நாட்களில் ஆட்சி அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டனர். அதற்கு தனது வலைப்பக்கத்தில் பதிலளித்துள்ள மோடி, புதிய அரசுகளுக்கு தேனிலவு காலம் என்ற ஒரு சௌகரியம் உண்டு. அதனை சில அரசுகள் 100 நாட்களும், அதை விடவும் கூட அதிக நாட்கள் நீட்டித்துக் கொள்வார்கள்.
ஆனால், எனக்கோ தேனிலவு காலம் என்பதே கிடையாது. பதவியேற்ற 100 மணி நேரத்துக்குள்ளேயே வரிசையாக பிரச்னைகளும், குற்றச்சாட்டுகளும் வரத் துவங்கிவிட்டன. அதில் பல இந்த அரசுக்கு சம்பந்தமே இல்லாதவை.
எதுவாக இருந்தாலும், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே செயல்படுவதால் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அதனால் எனக்கு எனது பணி முழு திருப்தியை அளிக்கிறது.
நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பவர்களுக்கு, புரிய வைப்பதுதான் பெரிய சவாலே என்று கூறியுள்ளார்.