சென்னை:கூட்டுறவுத் துறை சார்பில், 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, ‘அம்மா’ மருந்தகத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைத்தார்.தமிழகத்தில், நியாயமான விலையில், தரமான மருந்துகளை விற்பனை செய்ய, கூட்டுறவுத் துறையில், புதிதாக, ‘அம்மா’ மருந்தகம் துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லுார் கூட்டுறவு பண்டக சாலை; கடலுார் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; மதுரை மாவட்டம், பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; கே.கே., நகரில் அமைந்துள்ள, மதுரா கோட்ஸ் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலையில், அம்மா மருந்தகம் அமைக்கப்பட்டது.சேலம் என்.ஜி.ஓ., கூட்டுறவு பண்டக சாலை, தாரமங்கலத்தில் உள்ள, சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; காரைக்குடியில் உள்ள, சிவகங்கை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; விருதுநகர் மாவட்டம், சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை, ஸ்ரீவில்லிபுத்துார் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவற்றிலும், தலா 10 லட்சம் ரூபாய் செலவில், அம்மா மருந்தகம் அமைக்கப்பட்டது.
இவற்றை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, தலைமைச் செயலகத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், திறந்து வைத்தார்.இந்த மருந்தகங்களில், உயிர்காக்கும் மருந்துகளை, சிறப்பாக பாதுகாக்க, குளிர்சாதனப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு, ‘அவுட் சோர்சிங்’ முறை மூலம், மருந்தாளுநர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.தற்போது, 10 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விரைவில், 90 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கு தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும்: தமிழக முழுவதும் நேற்று ‘அம்மா’ மருந்தகங்கள் திறக்கப்பட்ட நிலையில், ‘கூட்டுறவு மருந்தகங்களும் தொடர்ந்து செயல்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.கூட்டுறவு துறையின் கீழ், தமிழகம் முழுவதும் 205 மருந்தகங்கள் செயல்படுகின்றன. பிற மருந்தகங்களை விட, கூட்டுறவு மருந்தகங்களில் 15 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி அளித்ததால் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 25 கோடி ரூபாயில் ‘அம்மா’ மருந்தகங்கள் அமைக்க கூட்டுறவு துறை முடிவு செய்தது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இம்மருந்தகங்களிலும் 10 சதவீத தள்ளுபடி உண்டு.கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே செயல்படும் கூட்டுறவு மருந்தகங்களை தான், ‘அம்மா’ மருந்தகங்களாக மாற்ற உள்ளதாக சிலர் கருதுகின்றனர்; அது தவறு. அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியாக இயங்கும். மத்திய அரசு உத்தரவுப்படி இரண்டிலும் 10 சதவீத தள்ளுபடி தரப்படும். இன்னும் தள்ளுபடி சதவீதத்தை அதிகரிக்க, வரும் காலங்களில் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தே நேரடி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.