எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை

harsh_vardhanஇந்தியாவில் எயிட்ஸ் தடுப்புக்கான பிரச்சாரம் ஆணுறைப் பயன்பாட்டை மட்டும் வலியுறுத்தாமல் குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும் சொல்லவேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.

சமீபத்தில் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் பேட்டி அளித்த போது, இந்தியாவில் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான பிரச்சாரங்கள் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது என்றும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதில் தான் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான பிரச்சாரங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன் இது திருமண உறவு என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும், நாட்டில் எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இவ்வகையான பிரச்சாரம் உதவும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பல சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்யும் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எழுப்பியது. கணவன் மனைவியாக வாழ்பவர்கள் மட்டும் தான் சமூகத்தில் இருக்கின்றார்களா என்ற கேள்விகளையும் இது எழுப்பியது. பாலியல் தொழில் செய்பவர்கள் போன்ற எச்.ஐ.வி தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சில பிரிவினர்களிடம் ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லாம் நாம் அறிவுரை அளிப்பது, எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்காது என்று கூறுகிறார் ஏய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் இந்திய சமூக நல அமைப்பின் நிறுவனரும் செயலாளருமான ஹரிஹரன்,

எய்ட்ஸ் தடுப்புப் பிரச்சாரம் குறித்து அமைச்சரின் கருத்துக்கள் சரியல்ல என்கிறார் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வென்றவருமான , டாக்டர் அன்புமணி ராமதாஸ்

எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான பிரச்சாரங்களில் ஆணுறை பயன்பாட்டை விட கணவன் மனைவிக்கு இடையே உள்ள பாலியல் உறவின் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சரின் கருத்து சரியானதே என்று கூறுகிறார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சேஷாத்ரி சாரி.

இதற்கிடையில் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் ‘பாலியல் கல்வி’ குறித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் கருத்து மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் இணைய தளத்தில், தில்லி பள்ளி கல்விக்கான நோக்கு என்ற பிரிவின் கீழ் ‘பாலுறவு கல்வி’ என்று கூறப்படும் கல்வி தடை செய்யப்படவேண்டும் என்றும், யோகா கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த கருத்து குறித்து பேசிய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் செயலாளர் வி.கே.சுப்புராஜ், பாலியல் கல்வி என்பது பள்ளிகூடங்களில் அவசியமான ஒன்று என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பிலும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

தனது இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், அது 2007ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முன் வைத்த இளம் பருவத்தினருக்கான கல்வி திட்டத்திற்கு எதிராகத்தான் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

பண்பற்றதன்மையுடைய, கலாச்சார ஆட்சேபணைக்குரிய வரைபடங்களை கொண்ட ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் பாலுறவுக் கல்வித் திட்டத்தை பாலுறவு கல்வி என்று ஏற்றுகொள்ளமுடியாது என்று அந்த விளக்கத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த இளம் பருவத்தினருக்கான கல்வி திட்டத்தில் கணிசமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -BBC

TAGS: