முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மனித வளத்தையும், நாட்டின் வளத்தையும் பாதுகாக்கக்கூடிய இயற்கை சார்ந்த பகுதிகளான காடுகள், மலைப் பிரதேசங்கள் மற்றும் அருவிகள் விழும் பகுதிகளைப் பாதுகாக்க பல முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பாரம்பரியமிக்க இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பாதுகாப்பது குறித்தும், குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் வசதிகள் குறித்தும் இன்று (நேற்று) எனது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு தலைமை வக்கீல் ஏ.எல்.சோமயாஜி உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து இழுக்கக்கூடிய பகுதிகளான மலைப் பிரதேசங்கள், வனப்பகுதிகள் மற்றும் அருவிகள் விழும் பகுதிகளில் இயற்கையை பேணிக்காப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், அவற்றை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்கு பிறகு, இயற்கையை போற்றிப் பாதுகாக்கும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
* வனப்பகுதிகள், அருவிப் பகுதிகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள இயற்கை எழிலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியமிக்க பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் என்ற ஓர் அமைப்பு எனது தலைமையில் ஏற்படுத்தப்படும். இதற்கான சட்ட முன்வடிவு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
* இந்த ஆணையம் சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியம்மிக்க அனைத்து பகுதிகளையும் பாதுகாக்க தேவையான அதிகாரங்களை கொண்டதாக அமையும்.
* குற்றால அருவியின் தூய்மையைப் பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* குற்றாலம் பகுதியில் தேவையான விளக்குகள் பொருத்தப்படுவதோடு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* பழைய குற்றாலம் மற்றும் பிரதான அருவி பகுதிக்கு இடையே சிற்றுந்துகள் இயக்கப்படும்.
* குற்றாலத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.
* சுற்றுலா பயணிகள் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வசதியாக, ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும்.
* குற்றாலத்தில் உள்ள அரசிற்கு சொந்தமான பழைய குடில்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும். இந்த அடுக்குமாடி கட்டிடம், சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப, அனைத்து வசதிகளுடன் கூடிய துயில் கூடங்கள், ஒருவர் படுக்கும் அறை, இருவர் படுக்கும் அறை, கூடுதல் வசதிகளுடன் கூடிய பெரிய அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
* குற்றாலத்தில் மகளிர் கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கூடுதலாக கட்டப்படும்.
* குற்றாலத்தின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், அருவிப் பகுதிகள், வாகன நிறுத்தும் இடங்கள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுவதோடு, அவற்றின் இயற்கை எழிலும் போற்றி பாதுகாக்கப்படும்’’என்று கூறி உள்ளார்.