சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று மதியம் சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்தது.
இதில் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 13 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 108 அவசர ஊர்தி, தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
இருவர் பலி
கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 15 பேர் மீட்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மதுரையை அடுத்த டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (25) என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த நிலையில் மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது 30 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் வேதனை
இந்த துயர சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேதனை தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மீட்புப் பணியில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள்- கமிஷனர் சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். சென்னை மாநகர பொலிஸ் ஆணையர் ஜார்ஜ் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். உதவி எண்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பற்றிய நிலைமை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.