முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகள் தமிழகத்திற்கு சொந்தமானவை: கருணாநிதியின் கடிதத்திற்கு ஜெயலலிதா பதில்

முல்லைப் பெரியாறு. பரம்பிகுளம் உட்பட நான்கு அணைகளும் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்றும், அவை தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கேரள சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி, “முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த உண்மை நிலையை நான் மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பின் குறிப்பில், “இந்த அணைகள் கேரள மாநிலத்தில் உள்ளன” என்றும், “தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், அணைகள் அமைந்துள்ள இடத்தின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை விவரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. எனவே தான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் கேரள மாநில அணைகள் பட்டியலின் கீழ் காட்டப்பட்டு உள்ளன. அதே சமயத்தில், பின் குறிப்பில் “இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

27.12.2013 அன்று நடைபெற்ற 32-வது அணை பாதுகாப்பு தேசிய குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் கீழ் வரும் அணைகள் பட்டியலில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை அணைப் பாதுகாப்பு தேசியக் குழு ஏற்றுக் கொண்டது.

கடந்த மே மாதம், மத்திய நீர்வளக் குழுமத்தின் அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ள குறிப்பில், பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் உள்ள அணைகளின் பட்டியல்கள், அணைகளின் இருப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கீழ் அந்த அணைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும்; இந்தத் தகவல்களின் அடிப்படையில், யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது என்றும்; இந்தப் பதிவேட்டில் ஏதாவது தவறு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டால், அவை திருத்தப்படும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முல்லைப் பெரியாறு குறித்த 7.5.2014 நாளைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் தேக்கடி மாவட்டத்தில் இருக்கிறது என்றும், இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  எனவே, கருணாநிதி கூறுவது போல், தமிழ்நாட்டின் உரிமை எதுவும் பறிபோகவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: