சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 53 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் 20லிருந்து 25 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் முழு மூச்சில் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது என்று ஒரு மூத்த தமிழ்நாடு அரசு வருவாய்துறை அதிகாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதார்.
இதனிடையே, விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமிப்பதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை மவுளிவாக்கம் பகுதியில், கட்டப்பட்ட நிலையில் இருந்து வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 70 கட்டுமானப் பணியாளர்கள் அந்தக் கட்டிடத்தில் இருந்தனர்.
இந்த இடிந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த ‘பிரைம் சிரிஷ்டி ஹவுசிங் லிமிடிட்’ என்கிற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த பொறியாளர்கள் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். -BBC