குழந்தைகள் இறப்பு சதவீதத்தைக் குறைக்க 4 தடுப்பு ஊசிகள் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ரோட்டா வைரஸ், ருபில்லா, போலியோ தடுப்பு ஊசி, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான 4 தடுப்பு ஊசிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு வழங்கும் உயிர்காக்கும் இலவச தடுப்பு ஊசிகளின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
இந்த புதிய முயற்சியின் மூலம் 2015ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் இறப்பு சதவீதத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைக்க முடியும். மேலும் போலியோ ஒழிப்பை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
இந்த தடுப்பு ஊசிகள், தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.