இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் சில பகுதிகளில் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிக்கூடங்களும் வணிக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரின் சிலபகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் முயற்சியாக, அதிகாரிகள் பொது மக்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், பிரதமர் மோடி முதற்தடவையாக காஷ்மீர் பகுதிக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
காஷ்மீர் பிராந்தியத்திற்கான தன்னாட்சி அதிகாரத்தைக் குறைக்கும் சர்ச்சைக்குரிய திட்டங்கள் பாஜக அரசாங்கத்திடம் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
காத்ரா நகரில் புதிய ரயில்சேவையை ஆரம்பித்துவைத்துள்ள நரேந்திர மோடி, இந்த ரயில்வே இணைப்பு காஷ்மீர் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC