முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்க்க பா.ஜ.க முடிவு

rajiv_assisnationஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது விடுதலைக்கு பா.ஜனதா அரசும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது.

அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் இவர்களையும் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட்பயஸ், உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி முடிவு செய்தது.

தமிழக அரசின் முடிவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பெப்ரவரி 20ம் திகதி மனு தாக்கல் செய்தது. இதையடுத்து 7 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்ககால தடை விதித்தது.

வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தான் ஓய்வு பெறுவதற்கு முன் தீர்ப்பு கூறுவதாக இருந்தார்.

தேர்தலின் போது தீர்ப்பு கூற எதிர்ப்பு கிளம்பியதால் தலைமை நீதிபதி சதாசிவம் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். 3 மாதத்துக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 8ந் திகதி உச்ச நீதிமன்றின் அரசியல் சாசன பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள்.

தமிழக அரசு வக்கீல் ஏற்கனவே வாதாடுகையில் 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக எடுத்துக் கூறினார். ஆனால் மத்திய அரசு வக்கீல், இது தீவிரவாதம் சம்மந்தப்பட்ட குற்றம் எனவே 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று வாதாடினார்.

தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. ஆனாலும் 7 பேர் விடுதலையில் பா.ஜனதா அரசு பழைய காங்கிரசின் கொள்கையையே கடை பிடிக்கும் என்றும், 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் வாதாடும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கச்சத்தீவு வழக்கிலும் முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கையையே புதிய அரசும் பின்பற்றியது. எனவே ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவிக்கையில்,

இந்த வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை பா.ஜனதா அரசு ஆராயும். இது ஒரு மிக மோசமான குற்றச் செயல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை மறக்க முடியாது என்றார்.

இந்த வழக்கில் முன்பு தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார். தற்போது அவர் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டதால் அவர் மத்திய அரசு வக்கீலாக ஆஜராக மாட்டார். வேறு ஒரு வக்கீல் மத்திய அரசு சார்பில் ஆஜராகிறார்.

TAGS: