கடைசி சீக்கிய மகாராஜா: ‘சோகமாக முடிந்த அத்தியாயம்’

dulip_singhஇந்தியாவின் சீக்கிய இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளரின் உடல், கிழக்கு இங்கிலாந்தில் சஃபொல்க் (Suffolk) வட்டாரத்தில் உள்ள அமைதியான ஒரு நாட்டுப்புறக் கிராமமான எல்வெடின்-இல் (Elveden) 1893-இல் புதைக்கப்பட்டது.

இப்போது நூறாண்டுகள் கடந்து, அவரது உடலை இந்தியாவுக்கு மண்ணுக்கு அனுப்பவேண்டும் என்கின்ற கோரிக்கை பிரிட்டனிலுள்ள சீக்கிய சமூகத்திடமிருந்து கிளம்பியிருக்கின்றது.

லாஹூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் ரஞ்சித் சிங்கின் வாரிசான இளவரசர் துலீப் சிங், தந்தை இறந்தபின்னர், தனது ஐந்தாவது வயதில் மகாராஜாவாக முடிசூடினார்.

ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் இடையிலான இரண்டாவது போருக்குப் பின்னர், 1849-இல் பிரிட்டிஷ் இந்தியாவுடன் பஞ்சாப் இணைக்கப்பட்டது.

அதன்பின்னர் மகாராஜா துலீப் சிங், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, இராணுவ அதிகாரி ஒருவரின் பொறுப்பில் வளர்க்கப்பட்டு, பின்னர் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இங்கிலாந்தில் ஆங்கிலேயே வாழ்க்கை முறைப்படி, கிறிஸ்தவராக வளர்ந்த துலிப் சிங், விக்டோரியா மகாராணி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்தார்.

பதின்மூன்று ஆண்டுகள் பிரிந்திருந்த தாயார் இங்கிலாந்து வந்து துலீப் சிங்குடன் இணைந்துகொண்டார்.

‘சோகமாக முடிந்துபோன அத்தியாயம்’

இழந்த இராச்சியத்தைப் பற்றியும் சீக்கிய அடையாளத்தைப் பற்றியும் தாயார் நினைவூட்ட, பின்னர் மீண்டும் சீக்கிய மதத்துக்கு மாறுவதாக அறிவித்தார் துலீப் சிங்.

துலிப் சிங் மகாராஜாவின் சிலையை இளவரசர் சார்ல்ஸ் 1999-இல் எல்வெடினில் திறந்துவைத்தார்

 

தமது பாரம்பரிய சொத்துக்களை கோரி மீண்டும் குடும்பத்துடன் இந்தியாவுக்கு செல்லும் வழியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட அவர், பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு வறுமையில் வாடிய நிலையில், 55-வது வயதில் உயிரிழந்த சீக்கிய இராச்சியத்தின் கடைசி மகாராஜாவின் உடல் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

அவரது சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமானால் இங்கிலாந்து திருச்சபையின் அனுமதி அதற்குத் தேவைப்படுகின்றது.

அதேநேரம் துலீப் சிங்கின் உடலை மீண்டும் தோண்டியெடுப்பது பற்றி பிரிட்டனிலுள்ள சீக்கிய சமூகத்திடம் இன்னும் ஒத்த கருத்து ஏற்படவில்லை.

தங்கள் கடைசி மஹாராஜாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டுசெல்லும் கோரிக்கையில் வெற்றியடைந்தே தீருவது தான் மகாராஜா துலீப் சிங் நூற்றாண்டு அறக்கட்டளையின் நம்பிக்கை.

‘ஒரு சீக்கியராகவே இருக்க வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார். இந்தியாவுக்கே செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாகவும் இருந்தது. சீக்கிய முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும். அதனால் அவரது உடல் சொந்த மண்ணுக்கே அனுப்பட வேண்டும். அவர் தான் எங்களின் கடைசி மஹாராஜா. முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சோகமான ஒரு அத்தியாயம் தான் அவரது வாழ்க்கை’ என்றார் மகாராஜா துலீப் சிங் நூற்றாண்டு அறக்கட்டளையைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங். -BBC

TAGS: