ஷாரியா நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்துக்குட்பட்டு அமையவில்லை

supreme_courtஇந்தியாவில், ஷாரியா நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டது கிடையாது என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை கூறியிருக்கிறது.

இந்த ஷாரியா நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் தனி மனித உரிமைகளில் தலையிடுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற வழக்கின் விசாரணையில், மதம் சார்ந்த சமுதாய அமைப்புகளால் நடத்தப்படும் நீதி விசாரணைகள் மூலம் மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பது போன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற அமைப்புகளின் மூலம், அரச ஆணைகள் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே பிறப்பிக்க முடியும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோருக்காக முறைப்படுத்தப்பட்ட ஷரியா சட்டமுறையை முன்வைத்து நடத்தப்படும் ஒரு சில விசாரணைகளில், தனி மனித அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவை தாக்கல் செய்த மனுதாரரான விஷ்வா லோச்சான் மதன், அவரது மனுவில் இது போன்ற மத அமைப்புகளால் நடத்தப்படும் நீதிமன்றங்கள், சட்டவிதிமுறைகளுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் இதன் மூலம் பறிபோவதாகவும் கூறியிருந்தார். -BBC

TAGS: