இந்து மக்கள் கட்சியினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டும்: அர்ஜூன் சம்பத்

இந்து மக்கள் கட்சியினர் இந்து தர்மத்தின்படி ஆயுதம் வைத்துக்கொள்ள ஆயுதங்கள் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதற்கு பழனியாண்டவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்பொருட்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் செவ்வாய்க்கிழமை பழனிக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு செய்தார்.

முன்னதாக பழனி அடிவாரம் கிழக்கு கிரிவீதி ராஜகுமாரன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.  கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீராம்பிரபு, ரமேஷ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர் அளித்த பேட்டியில்,

நாட்டின் எரிபொருள் இறக்குமதியை குறைக்க வேண்டும். எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் கரும்பு விவசாயம் மேம்படும். திருப்பதியை போல் பழநி கோயிலுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அடிவாரம், கிரிவீதிப் பகுதிகளில் உள்ள மதுக்கடை மற்றும் மாமிசக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சரியில்லை.  அரசின் நுண்ணறிவுப்பிரிவு சரிவர செயல்படவில்லை. வேவு பார்க்க வேண்டியவர்களை விட்டு விட்டு தேவையில்லாதவர்களை வேவு பார்க்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசின் வாக்கு சதவிகிதத்தை பார்க்கும்போது, 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் மின்னணு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அரசியல் கட்சிகளின் வெளியிட்டுள்ள புகாரில் அர்த்தம் ஏற்படுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசிடம் இதுதொடர்பான விசாரணை நடத்த வலியுறுத்தப்படும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதில் அறநிலையத்துறை மெத்தனம் காட்டுகிறது.

ஆலய நிலங்களுக்கு குத்தகை பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்து அமைப்புகளின் தலைவர்கள் தமிழகம் ஆங்காங்கே படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்து மக்கள் கட்சி உறுப்பினர்களை வேல், பிச்சுவாகத்தி போன்றவற்றை தற்காப்பிற்காக பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். இவை விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.

பட்ஜெட்டில் நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனில் போரட்டம் நடத்தப்படும். பழனி,தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு சென்று சிறு நிதிநிறுவனம் நடத்தி வருவோர் கேரளாவை சேர்ந்த பெரிய நிதி நிறுவனங்கள் ஆதரவோடு காவல்துறை உதவியால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து கேரள முதல்வர், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தீர்வு காண வலியுறுத்துவோம்.  இல்லாவிட்டால் கேரளாவை சேர்ந்தவர்களின் நிதி நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்காததற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இந்து மக்கள் கட்சி செய்யும் என தெரிவித்தார்.

TAGS: