இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ச.ராமதாஸ், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
சென்னை அருகே 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது. விதிமீறல்,
ஊழல் போன்றவற்றை மறைக்கவே இந்தப் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இரு அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் இந்தக் கட்டடம் இடிந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி விசாரிக்கக் கூடாது. அவர் ஏற்கெனவே 9 விசாரணைக் கமிஷன்களுக்கும் தலைவராக உள்ளார்.
எனவே, வேறு நீதிபதியை இந்த விசாரணைக்கு நியமிக்க வேண்டும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்துவதற்கு திமுக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதாகூட ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
மேலும், தேசிய அளவில் 13 அரசியல் கட்சித் தலைவர்களும், உலக அளவில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. எனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறையை கைவிட்டுவிட்டு ஏற்கெனவே இருந்த வாக்குச் சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும். இதற்காக பாமக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
விளை நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்கள் பதிக்கக் கூடாது என்று பாமகதான் முதல் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆந்திர மாநிலத்தில் விபத்து ஏற்பட்டதில் இருந்து, எங்களது எதிர்ப்பு நியாயமானதுதான் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இப்போது குழாய் பதிக்கத் தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாமகவைப் பொருத்தவரையிலும் விளை நிலங்கள் வழியாக மட்டுமன்றி, தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லக் கூடாது.
இந்தியாவில் பாஜக அரசு ஹிந்தி திணிப்பு வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. ரயில்வே பட்ஜெட் தொடர்பான பத்திரிகை விளம்பரத்தை ஹிந்தியில் கொடுத்ததில் இருந்து அது உறுதியாகிறது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்கள் அனைத்தும் ஹிந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஹிந்தி திணிப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். இதன்மூலம், தமிழும் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக மாறும் என்றார் ராமதாஸ்.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மு.கார்த்தி, அ.தமிழரசு, இளைஞரணிச் செயலர் இரா.அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.