ஆயுட்கைதி விடுதலை: மாநில அரசுகளின் பதில் கோருகிறது உச்சநீதிமன்றம்

supreme_court_indiaஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கபட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை புதன்கிழமையன்று அரசியல் சாசன அமர்வு முன்பு துவக்கப்பட்டது.

அப்போது மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்றவரை, மன்னித்து விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா , ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசுளிடம் இருந்து ஜூலை 18ம் தேதிக்குள் பதில் கோரப்பட்டுள்ளது.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் இந்த வழக்கில் முடிவுகள் வெளியாகும் வரை எந்தவொரு மாநில அரசும் இது போன்ற விடுதலை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்வது தொடர்பில், குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, முன்னதாக அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

அந்த சமயத்தில் இந்த வழக்கு குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பதில் மனுக்களை விட குற்ற விசாரணை முறைச் சட்ட விதிமுறைகளுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றனர்.

முருகன் சாந்தன் பேரறிவாளன்

ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனு விவகாரத்தில் தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்த நாளான பிப்ரவரி 19ம் தேதியன்று, இந்த மூன்று பேருடன் ஏற்கனவே இதே வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. -BBC

TAGS: