இந்திய பட்ஜெட் : பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என அரசு நம்பிக்கை

budget_indiaஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.

வரிவிலக்குக்காக வரையறுக்கப்பட்ட விளிம்பினை உயர்த்தி, மக்களின் வரி சுமை குறைக்கப்பட்டுவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய திட்டப்பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பின் படி தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூபாய் 2 லட்சத்தில் இருந்து ரூபாய் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த உச்சவரம்பு ரூபாய் 2.5 லட்சத்தில் இருந்து ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு

இனி புகைவிட கூடுதல் பணம் தேவை

புகையிலை பொருட்களுக்கான மற்றும் சில குறிப்பிட்ட பானங்களுக்கான வரி விகிதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புகையிலை பொருட்களுக்கு மட்டும் 22 சகவிகிதம் அதிகப் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான, குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆவது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், 2014-15 ஆம் ஆண்டுக்கான இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அருண் ஜெட்லி அவரது உரையின் துவக்கத்தில், இந்திய மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளதை அரசு உணர்ந்துள்ளதாக தெரிவித்தார். இருந்த போதும் கவர்ச்சித்திட்டங்கள், அநாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், நாட்டின் வளர்ச்சியை அடுத்த 2 ஆண்டுகளில் 7 முதல் 8 சகவிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சகவிகிதத்திற்கும் குறைவாக இருந்துள்ளதால், தற்போது நிலவும் சவால்களை சமாளிக்க அரசாங்கத்திற்கு தனியாக செலவு நிர்வாக ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி, தேவையில்லாத செலவினங்களை கட்டுபடுத்த முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார். மேலும் மானிய செலவினங்களை முறைப்படுத்தவும் இந்த ஆணையம் பரிந்துரைகளை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

கல்வி, மருத்துவம், விவசாயம், சுகாதாரம், பெண்களின் பாதுக்காப்பு மற்றும் அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுக்காப்புத்துறை உள்ளிட்ட நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல துறைகளில் அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் 100 சிறப்பு நவீன நகரங்களை நாடு முழுவதும் அமைக்கவும், 7060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார். அதே சமயம், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் உள்ளிட்ட நகரங்களிலும் தடையில்லாத மின்சாரம் வழங்கும் திட்டம் வரும் 2019ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

கல்வியில் சிறப்பு கவனம்

கூடுதல் ஐஐடி, எய்ம்ஸ் கல்வி மையங்கள் அறிவிப்பு

புதுடில்லியில் உள்ளது போன்ற அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட ‘எயிம்ஸ்’ எனப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் சென்னையிலும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதைப்போலவே நாட்டில் புதியதாக 5 ‘ஐஐடி’ எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் 5 ‘ஐஐஎம்’ எனப்படும் இந்திய மேலாண்மை கழகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கல்வித்துறையில் நாடு பின்தங்கியிருக்கும் நிலையை மாற்றியமைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இந்தியாவில் நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆராய்வதற்கு ரூபாய் 100 கோடியும், கங்கை நதியை சுத்தப்படுத்தி சீரமைக்கும் திட்டப்பணிக்காக 2037 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

பாதுக்காப்பு நடவடிக்கையை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்த மாநில காவல்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய சாலை மேம்படுத்தல் பணிக்காக ரூபாய் 37,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும், மேலும் நாட்டில் புதியதாக 16 துறைமுகங்கள் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வடகிழக்கு மாநிலங்களுக்காக அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிரத்யேகமாக ‘அருண் பிரபா’ என்கின்ற பெயரில் புதிய 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று துவங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் இன்று வெளியிட்டார்.

புதிய முன்னெடுப்புக்கள்

நாட்டின் கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளிலும் பல்வேறு புதிய திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக போர் நினைவக அருங்காட்சியகம் ஒன்று 100 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள், விளையாட்டுத் துறைக்காக தனித்திட்டப் பணிகளை தெரிவித்து நிதி ஒதுக்கீட்டையும் அவர் வெளியிட்டார்.

கோவாவிற்கு அதிக அளவில் வருகை புரியும் வெளிநாட்டவர்களை கவரும் விதத்தில், ஏற்கனவே சர்வதேச இந்திய திரை விழா ஆண்டுதோறும் அங்கு நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அருண் ஜெட்லி, மேலும் அங்கு சர்வதேச ஒருங்கிணைப்பு கூடம் ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறினார்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுடனான தொலைத்தொடர்பை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும், புதுவை மாநிலத்திற்கான மறுசீரமைப்பு நிதியையும் அவர் அறிவித்தார். -BBC

TAGS: