சாவின் விளிம்பிலுள்ள பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்து: மோடி பாராட்டு

மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சாவின் விளிம்பில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்தைப் போல புத்துயிர் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியிருப்பவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளியேற்றும் பட்ஜெட் இது.

சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதனுக்குக் கூட இந்த பட்ஜெட் சூரிய உதயத்தைக் காட்டும்.

“அனைவருக்கும் ஆதரவு, அனைவருக்கும் வளர்ச்சி’ (சப்கா சாத், சப்கா விகாஸ்) என்ற முழக்கத்தை நிறைவேற்றும் வகையில், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நல வாழ்வுக்காக பாஜக அரசு பாடுபடும்.

மகளிர் நலன்: விலைவாசி உயர்வால் வாட்டமடைந்திருக்கும் இந்திய மகளிர்க்கு இந்த பட்ஜெட் புதிய நம்பிக்கையை அளிக்கும். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது, பெண் கல்வி ஆகியவற்றுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்தே, இந்த அரசால் நெருக்கடியிலிருந்து தேசத்தை மீட்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டும், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது பட்ஜெட்டும் அந்த சந்தேகத்தைத் தகர்த்துள்ளன என்று மோடி கூறியுள்ளார்.

TAGS: