இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்: குடியரசுத் தலைவரிடம் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு

தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சுப்பிரமணியன் சுவாமி வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக எனக்குத் தெரியவந்துள்ள விவரங்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தேன். தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றேன். ஐ.எஸ்.ஐ. அமைப்பால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்குள் அதிக அளவில் ஊடுருவியுள்ளனர். இந்த விவகாரத்தைக் கையாள கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டேன். அண்மையில் தமிழக முஸ்லிம்கள்கூட இராக்கில் செயல்பட்டு வரும் கலிஃபா ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். எனவே, தீவிரவாதிகள் ஊடுவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பின் 256-ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்’ என்று அறிக்கையில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

TAGS: