வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஒபாமா அனுப்பிய அழைப்பிதழ் கடிதத்தை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், தில்லியில் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து வழங்கினார்.
இச் சந்திப்பின் போது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், அமெரிக்க வெளிவிவகார அதிகாரி கேத்லீன் ஸ்டீபன்ஸ், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அந்நாட்டு உதவி அமைச்சர் நிஷா பிஸ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் மாதம் வாஷிங்டன் வருமாறு மோடிக்கு ஒபாமா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடியுடன் நெருங்கி பணியாற்ற விரும்புவதாகவும், இதன் மூலம் இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவு, 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கூட்டாண்மையாக உருவாகும் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மோடி, பிரதமராக தான் கடந்த மே மாதம் பதவியேற்றவுடன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா வாழ்த்து தெரிவித்ததை நினைவுகூர்ந்ததோடு, அவரது விரிவான கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் “இந்தப் பயணம் உறுதியான முடிவுகளை எடுக்க உதவும். அதன் மூலம் இந்திய – அமெரிக்க உறவில் புதிய உத்வேகம் ஏற்படும்.
உலகத்திலேயே ஜனநாயகத்தில் பழைமைவாய்ந்த அமெரிக்காவும், பெரிய ஜனநாயகம் கொண்ட இந்தியாவும் இணைந்து செயல்படுவதன் பலன் இரு நாடுகளோடு நின்றுவிடாமல், உலகம் முழுவதும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவை ஏற்பட வலிமையான சக்தியாக உருவெடுக்க வேண்டும்’ என்று மோடி தெரிவித்தார்.
அதற்கு, வில்லியம் பர்ன்ஸ், “பெருளாதார உறவை மேம்படுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தீவிரவாதத்தை ஒடுக்கவும், உளவுத்தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், ஆசியாவில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஒபாமா விரும்புகிறார்’ என்று பதிலளித்தார்.
அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் விருப்பத்துடன் இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.