இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே கைபேசி பாவனையை தடைசெய்ய வேண்டும் என்று மாநில சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று பரிந்துரை முன்வைத்துள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகளுக்கு கைபேசி பயன்பாடு முக்கிய காரணமாக இருந்துள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறார் நல்வாழ்வுக்கான அனைத்துக் கட்சி சட்டமன்றக் குழு கூறியுள்ளது.
தேவையான இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தவும் இந்தக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
சமீபத்தில் பெங்களூரு நகரத்தில் உள்ள பூங்காக்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டமைக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் இந்த பரிந்துரை வந்துள்ளது.
பள்ளி மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் தொந்தரவு கொடுப்பதற்கு ஆண்கள் முயன்றுள்ள சம்பவங்களே தமது நடவடிக்கைக்கு காரணம் என்று இந்த சிறப்புக் குழுவின் தலைவரான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகுந்தலா ஷெட்டி கூறினார்.
ஆனால், கல்வித்துறை சாராத அரசியல்வாதிகள் இவ்வாறான பரிந்துரையை முன்வைத்துள்ளமைக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
‘கல்வித்துறை தொடர்பான விவகாரங்களில் எந்த ஒரு முடிவு எடுப்பதையும் கல்வி நிறுவனங்களிடமே விட்டுவிட வேண்டும், இது தொடர்பிலான முடிவுகளில் அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக்கூடாது’ என்று பெங்களூருவை சேர்ந்த புனித அலாய்சிஸ் கல்லூரியின் முதல்வர் முனைவர் அம்ப்ரோஸ் பின்டோ கூறியுள்ளார்.
கைபேசி பாவனையை தடைசெய்வது ஜனநாயக விரோ செயல் என்றும் அவர் கூறினார். -BBC