காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட நிலக்கரி ஊழல் விவகாரத்தில், சிபிஐ மன்மோகன் சிங்கை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2004ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மன்மோகன் சிங், நிலக்கரி அமைச்சகப் பணிகளை கவனித்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
அப்போது, நிலக்கரி சுரங்கங்களை தனியார்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகாரையடுத்து, இதுபற்றி ஆய்வு செய்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையினர் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த 2012–ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விசாரணையை விரைந்து முடிக்க சி.பி.ஐ. கடும் முயற்சிகள் எடுத்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் நிலக்கரி அமைச்சகத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவரிடம் விசாரணையை நடத்த முடிய வில்லை.
இந்நிலையில் தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
மேலும், இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை அனைத்திலும் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மன்மோகன்சிங்கே இறுதி முடிவு எடுத்ததாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.