வேட்டியில் வந்த நீதிபதிக்கு அனுமதி மறுப்பு: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்

veattyவேட்டி உடுத்தி சென்றதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் வீரமணி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தமிழக மாநில சட்டத்துறையின் ஆலோசனை பெற்று, முதலமைச்சர் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களும், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோரும் வேட்டி உடுத்திக் கொண்டு சென்றபோது அதற்காக அவர்கள் விழாவில் கலந்துகொள்வது தடுக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் இச்சம்பவத்தை எழுப்பியிருந்தனர். நீதிபதியையும் வழக்கறிஞர்களையும் அவமதித்த இந்த கிளப்புக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று திமுக கட்சியின் சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கண்டம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி, “தமிழர்களின் கலாச்சாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுவாக தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வர வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்குவதற்கு அரசே முன்வந்து அறிவுரை வழங்குவதுதான், இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு தனி சட்டம் இயற்றி, எல்லா இடங்களிலும் வேட்டி கட்டிக்கொண்டு செல்ல தடையில்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அந்த அறிக்கையில், “ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இப்படிப்பட்ட கிளப்புகளில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது என்றும், ஆனால், அடிமை விலங்குகள் உடைந்து, ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும் அன்றைய கலாச்சார ஆதிக்கத்தை இன்றளவும் நடைமுறைப்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்”, என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வழக்கறிஞர்கள் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். -BBC

TAGS: