காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளதால், 2007-இல் அளிக்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் கோரும் தமிழக அரசின் மனுவை தற்போது ஏற்க இயலாது என்று காவிரி நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடுவர் மன்றம் விசாரிக்கலாமா என்பது பற்றி உச்ச நீதிமன்றத்திடமே கேட்டுத் தெளிவு பெறுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின் காவிரி நடுவர் மன்றம் தில்லி ஜன்பத் பவனில் உள்ள மத்திய நீர் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்பாயத்தில் செவ்வாய்க்கிழமை கூடியது. நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையிலான நடுவர் மன்றத்தில் உறுப்பினர்கள் என்.எஸ்.ராவ், சுதிர் நாராயண் ஆகியோர் அமர்வில் இடம் பெற்றனர்.
தமிழகம் வாதம்: தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வினோத் பாப்டே, உமாபதி ஆகியோர் வாதாடினர். வினோத் பாப்டே வாதிடுகையில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. அதேபோல் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட விளக்கம் கோரும் மனுவை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, தமிழத்தின் மனுவை நடுவர் மன்றம் விசாரிக்க வேண்டும்.
கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கம் கோரும் மனுவை நடுவர் மன்றம் ஏற்று விசாரித்து உத்தரவு பிறப்பித்தது. அதேபோல் காவிரி நடுவர் மன்றம் 2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பான மனுவை விசாரிக்க மீண்டும் நடுவர் மன்றத்துக்கு உரிமை உள்ளது. இம் மனுவை விசாரித்து நீர்ப் பங்கீடு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டால், காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வசதியாக இருக்கும்’ என்றார் வினோத் பாப்டே.
கர்நாடகம் ஆட்சேபம்: ஆனால், தமிழக அரசின் வாதத்துக்கு கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அனில் திவான் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், “காவிரி நடுவர் மன்ற முன்னாள் தலைவர் என்.பி.சிங் கூட, இறுதித் தீர்ப்பில் விளக்கம் கோரிய தமிழகத்தின் மனுவை விசாரிக்கவில்லை. எனவே முதலில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மனுக்கள் மீது முடிவு செய்ய வேண்டும். எனவே, தமிழகத்தின் மனுவை நடுவர் மன்றம் விசாரிக்கக் கூடாது’ என்றார்.
அவரது வாதத்துக்கு ஆதரவாக கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரமேஷ் பாபு கருத்து தெரிவித்தார். எனினும், புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.எஸ்.நம்பியார், தமிழக அரசின் நிலைக்கு ஆதரவு தெரிவித்தார்.
உத்தரவு: நான்கு மாநிலங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைக் கேட்ட நீதிபதி பி.எஸ்.செளகான் பிறப்பித்த உத்தரவு: “இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு மனு மீதான விசாரணையை நடுவர் மன்றம் விசாரிக்கலாமா, வேண்டாமா என்பதிலேயே தெளிவற்ற போக்கு நிலவுகிறது. இதுபற்றி உச்ச நீதிமன்றத்திடமே முறையிட்டு உரிய விளக்கத்தை தமிழகம் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால் தமிழகத்தின் மனுவை நடுவர் மன்றம் விசாரிக்கும். ஆகவே, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு முதலில் அணுகும்படி அறிவுறுத்துகிறோம்’ என்று உத்தரவில் சௌஹான் குறிப்பிட்டார்.
பின்னணி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக 2007, பிப்ரவரி 5-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், “தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு ஆண்டுதோறும் திறந்து விட வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், அத் தீர்ப்பு வெளியான சில நாள்களிலேயே தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தன. இதற்கிடையே, தீர்ப்பில் உள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் பிரச்னைகள் உள்ளதாக கர்நாடக அரசும் நடுவர் மன்றத்தில் முறையிட்டிருந்தது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட நான்கு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்தன. இந் நிலையில், நடுவர் மன்றக் கூட்டம் 2007, ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது.
அதன் அப்போதைய தலைவர் என்.பி. சிங், “உச்ச நீதிமன்றத்தில் நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சில மனுக்கள் நிலுவையில் உள்ளதால், நடுவர் மன்றத்தில் முறையிடப்பட்ட மனுக்களை விசாரிக்க முடியாது’ என்று மறுத்தார். இந் நிலையில், 2012-இல் என்.பி. சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து நடுவர் மன்றத் தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி.எஸ்.செளஹானை கடந்த மே மாதம் மத்திய அரசு நியமித்தது.
ஒரே நாடு. அதற்கு ஒரு தண்ணீர் பிரச்சனை. அதற்காக ஒரு சண்டை. அரசியல்வாதிகளுக்குத் தான் எது நடந்தாலும் இலாபம். அரசியல்வாதிகள் தண்ணீரைக் கூட நிம்மதியாக விட்டு வைக்கவில்லை!
கேரளா,ஆந்திர,கன்னடா,சிறிலங்காவிடம் இழந்த அனைத்து நிலங்களுடம் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இல்லையேல் இதற்கு தீர்வு கிடையாது!