இலங்கை வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை! மத்திய அரசிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

sushma-anbumaniதமிழர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை நாட்டுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், முன்னாள் எம்.பி.யான ஆர்.செந்தில், வழக்குரைஞர் கே.பாலு உள்ளிட்டோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

இலங்கையில் தமிழர்கள் இன்னும் அச்சத்தில்தான் வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ மயமாக்குதல், சிங்கள மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் இருந்தாலும், பெயரளவுக்குதான் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆளுநராக அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்தவர்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் அமைக்கப்படும் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை நட்பு பாராட்டி வருகிறது.

இலங்கையில் திருகோணமலை அருகே சீனாவின் படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாகும்.

இலங்கையுடன் பாகிஸ்தான் நட்புறவு பாராட்டி வருவது கடல் வழியாக அந்நாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

எங்களது கருத்துகளைக் கேட்டறிந்த அவர், “தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது. தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்’ என்று உறுதியளித்தார்.

இந்த விஷயத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல் அல்லாமல், இலங்கை அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு துணிச்சலான முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான தூக்கு தண்டனை வழக்கு, கச்சதீவு உள்ளிட்ட விவகாரங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றிய நடவடிக்கைகளையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பின்பற்றி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, “நரேந்திர மோடி அரசு பதவியேற்று ஒரு மாதம்தான் ஆகியுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்தான் உள்ளது.

எனவே, இன்னும் ஓரிரு மாதங்களில் அதை ஆராய்ந்து மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

TAGS: