பிரேசிலில் நடைபெறும் “பிரிக்ஸ்’ மாநாட்டையொட்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். அப்போது, அணுசக்தி, பாதுகாப்பு, எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட வருமாறு விளாதிமிர் புதினுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
“பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் பிரேசில் சென்றுள்ளனர். மாநாட்டு நிகழ்ச்சிக்கிடையே ஃபோர்டாலிசா நகரில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.
சுமார் 40 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக மோடிக்கு தனது வாழ்த்துக்களை புதின் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து டுவிட்டர் இணையதளத்தில் மோடி வெளியிட்ட பதிவில், “ரஷியா – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்; ரஷியாவுடனான உறவுக்கு இந்தியா பெருமதிப்பு அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்புக்கு, இரு தரப்பு அளவிலும், சர்வதேச அளவிலும் ரஷியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும், ரஷியாவின் நட்புறவுக்கும் புதினிடம் மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
மேலும் அவர், இந்தியாவில் உள்ள சிறு குழந்தையைக் கேட்டால்கூட, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு ரஷியாதான் என்று பதிலளிக்கும் என்றும், ஏனெனில் பிரச்னையான காலகட்டங்களில் இந்தியாவுடன் ரஷியாதான் இருந்தது என்றும் புதினிடம் கூறினார்.
அதிபர் புதினின் உறுதியான தலைமை, இந்தியா – ரஷியா இடையே நிலவும் சிறப்பு வாய்ந்த, தனித்துவமிக்க பிராந்தியக் கூட்டுறவை மேலும் விரிவுபடுத்தி வருவதற்கு தனது மனமார்ந்த பாராட்டுதலை மோடி தெரிவித்தார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியது: “ரஷியாவுடனான உறவை மேலும் விரிவுபடுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதாக புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக புதினிடம் மோடி தெரிவித்தார்.
இந்திய மாணவர்கள் ரஷியாவில் கல்வி கற்பதற்கு வசதியாக அந்நாட்டு அரசு விசா விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று புதினிடம் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனைக் கேட்ட புதின், அதுகுறித்து பரிசீலிப்பதாகப் பதிலளித்தார்.
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் புதின் பயணம் மேற்கொள்ளும்போது தலைநகர் தில்லி மட்டுமன்றி பிற பகுதிகளுக்கும் வருகை தர வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தைப் பார்வையிட வர வேண்டும் என்றும் புதினுக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதற்கு புதின் பதிலளிக்கையில், “அது சிறந்த யோசனை’ என்றார்.
குஜராத் முதல்வராகத் தான் பதவி வகித்த காலத்தில், ரஷியாவின் அஸ்ட்ராகான் பகுதியில் சுற்றுப்பயணம் செய்ததை நினைவுகூர்ந்த மோடி, அஸ்ட்ராகானில் இருந்தபோது, இந்தியாவில் இருந்ததுபோல் தான் உணர்ந்ததாக புதினிடம் குறிப்பிட்டார்.
மோடியிடம் புதின் பேசுகையில், இந்தியாவுடனான உறவுக்கு ரஷியா முக்கியத்துவம் அளிக்கிறது என்றும், இந்திய-ரஷிய உறவுக்கு அணுசக்தித் திட்டம் ஓர் அடையாளம் என்றும் தெரிவித்தார்’ என்றார் சையத் அக்பருதீன்.