முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் துவங்கின

mullai_periyar_damதமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகத்தான் இருக்கும் என கேரள அரசு இயற்றிய சட்டத்தை அண்மையில் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தவும் உத்தரவிட்டது. மேலும் அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து கண்காணிக்க தமிழகம், கேரளம், மத்திய அரசு பிரதிநிதிகளை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, தமிழக பொதுப் பணித்துறை செயலர் சாய்குமார், கேரள அரசின் கூடுதல் தலைமைச்செயலர், மத்திய நீர் வாரியத்தைச் சேர்ந்த நாதன் அடங்கிய மூவர் குழுவினர் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்தக் குழுவின் கூட்டமும் தேக்கடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு, வனச்சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி, கேரள அரசின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும் இதற்குப் பிறகு, முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு நீரைத்தேக்கி வைப்பதற்கான பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், அணையில் உள்ள 13 மதகுகளின் கதவுகளை கீழே இறக்கினர்.

அணையின் நீர்மட்டம் 136 அடியைத் தொட்ட பிறகு, இந்த மதகுகளின் வழியாகத்தான் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த 13 மதகுகளின் கதவுகளும் கீழிறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேக்கடியில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க தமிழக கேரள அதிகாரிகளை உள்ளடக்கிய துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதம் ஓன்றாம் தேதி நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

1895ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியளிக்கிறது.

1979ல் ஆணையின் பாதுகாப்பு குறித்து, கேள்வியெழுப்பப்பட்டு, அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. அதற்குப் பின் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு சம்மதிக்கவில்லை.

இதுதொடர்பாக தமிழக அரசு வழக்குத் தொடர்ந்ததையடுத்து, முதற்கட்டமாக அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த்து. இந்த உத்தரவை மீறி, கேரள சட்டசபையில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேரள அரசின் சட்டத்தை ரத்து செய்தது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், அணை நிர்வாகத்தை ஏற்க மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்து கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டது. -BBC

TAGS: